மொடக்குறிச்சி அருகே ஈக்கள் மொய்க்கும் கோழிப்பண்ணையில் எம்.எல்.ஏ. ஆய்வு


மொடக்குறிச்சி அருகே ஈக்கள் மொய்க்கும்  கோழிப்பண்ணையில் எம்.எல்.ஏ. ஆய்வு
x

எம்.எல்.ஏ. ஆய்வு

ஈரோடு

மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை சேமூரில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு சுகாதாரக் கேடு நிலவுவதால் சுற்றுவட்டார பகுதிகளில் ஈக்கள் தொல்லை தாங்கமுடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தார்கள். மேலும் கோழிப்பண்ணையை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் அதிகாரிகளுடன் சென்று கோழிப்பண்ணையை ஆய்வு செய்தார். அதன்பின்னர் பொதுமக்கள் சார்பில் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு சுகாதாரம் காக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மாதம் கோழிப்பண்ணை பிரச்சினை குறித்து மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் கணபதி, வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை பூந்துறை சேமூர் மாரியம்மன் கோவில் திடலில் நடந்தது.

இதற்கிடையே ஈக்கள் தொல்லை அதிகமானதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணையில் ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் அப்பகுதி மக்களிடம், கோழிப்பண்ணையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. குவியல் குவியலாக ஈக்கள் காணப்படுகிறது. வருகிற 15-ந் தேதி மாலை 3 மணி அளவில் மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து சுகாதார அதிகாரிகள், பொதுமக்கள், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கொண்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் கோழிப்பண்ணையை சுகாதாரமாக பராமரிப்பது குறித்து உத்தரவாதம் கிடைக்கவில்லை என்றால் அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறினார்.


Next Story