வெள்ளத்தில் மிதக்கும் 'மலைகளின் இளவரசி' அருவிகளில் வெள்ளப்பெருக்கு-மலைப்பாதை துண்டிப்பு


வெள்ளத்தில் மிதக்கும் மலைகளின் இளவரசி  அருவிகளில் வெள்ளப்பெருக்கு-மலைப்பாதை துண்டிப்பு
x

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பலத்த மழை

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவு 6.45 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு வரை கொட்டித்தீர்த்த மழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி போட் கிளப்பில் 234 மில்லிமீட்டரும், அப்சர்வேட்டரியில் 176 மில்லி மீட்டரும் மழை பதிவானது. கொடைக்கானல் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் அதிக அளவு மழை இன்று பதிவானது குறிப்பிடத் தக்கது.

போக்குவரத்து துண்டிப்பு

இதேபோல் வத்தலக்குண்டு சாலையில் நேற்று நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

மழை காரணமாக ஏரிச்சாலையில் சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் சாலையோர கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் நகராட்சி நிர்வாகத்தினர் நட்சத்திர ஏரியில் மதகுகளை திறந்துவிட்டு உபரிநீரை வெளியேற்றினர். இதன் காரணமாக நேற்று பகல் நேரத்தில் ஏரிச்சாலையில் வெள்ளம் வடிந்தது. ஏரியில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

கார் சேதம்

இதேபோல் கொடைக்கானல் நகரில் உள்ள பியர் சோலாஅருவி, பாம்பார் அருவி, தேவதைஅருவி உள்பட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதற்கிடையே வில்பட்டியில் இருந்து நாயுடுபுரம் நோக்கி நேற்று இரவு வந்த காரின் மீது சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. நேற்று பகலிலும் நகர் பகுதியில் சாரல் மழை பெய்தது.

மஞ்சளாற்றில் வெள்ளம்

இதேபோல் வத்தலக்குண்டு பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் கரணமாக ஆற்றுக்கரையோர பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story