காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு: குமாரபாளையத்தில் வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் பொதுமக்கள் அவதி


காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குமாரபாளையத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நாமக்கல்

குமாரபாளையம்:

வெள்ளப்பெருக்கு

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்து வருகிறது. இந்த மழை தீவிரமடைந்துள்ளதால் கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீர், காவிரி ஆற்றில் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

இதனால் தொடர்ச்சியாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரங்களில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதேபோல் குமாரபாளையத்தில் அண்ணா நகர், கலைமகள் தெரு இந்திரா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் வசித்த பொதுமக்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். நேற்றும் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டதால் 2-வது நாளாக பொதுமக்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் உணவு, உடைகள் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் அவதி

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 3-வது முறையாக குமாரபாளையத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. எனவே காவிரி கரையோரம் வசிக்கும் எங்களுக்கு வேறு இடத்தில் வீடுகளை கட்டி தர வேண்டும் என்றனர்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் குமாரபாளையத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்வது வாடிக்கையாகி வருவதால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.


Next Story