காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; பவானியில் 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது


காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானியில் 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

ஈரோடு

பவானி

காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானியில் 100 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

மீண்டும் வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநிலத்தில் மழை மீண்டும் தீவிரமடைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

இது நேற்று காலை அதிகரித்து 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு ஓடுகிறது.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

இதனால் காவிரி படித்துறைகள், காவிரி கரையின் தாழ்வான பகுதிகளாக உள்ள புதிய பஸ் நிலையம், காவிரி வீதி, காவிரி நகர், நேதாஜி நகர், தினசரி மார்க்கெட் அருகே உள்ள பசுவேஸ்வரர் வீதி, கீரைகார தெரு, பவானி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை, செல்லியாண்டி அம்மன் கோவில் படித்துறை, கூடுதுறை படித்துறை ஆகியவை தண்ணீரில் மூழ்கின.

மேலும் நேதாஜி நகர், காவிரி வீதி, மற்றும் பசுவேஸ்வரர் வீதி ஆகிய பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். ஆங்காங்கே ஒதுக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய் துறையின் சார்பில் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வருவாய் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story