மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு


மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே மார்க்கண்டேயன் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே மார்க்கண்டேயன் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மார்க்கண்டேயன் நதி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக வந்து தென்ெபண்ணை ஆற்றில் கலக்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகவும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக மழை இல்லாததால் ஆற்றில் நீர் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் மார்க்கண்டேயன் நதிக்கு தண்ணீர் வரவில்லை. இதனிடையே ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லையோர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுவட்டார கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆற்றில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மார்க்கண்டேயன் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை ஏராளமானோர் வந்து பார்த்து செல்கின்றனர்.


Next Story