கோடியூரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
31 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பி கோடியூரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் தவித்தனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே 31 ஆண்டுகளுக்கு பிறகு உடையாண்டஅள்ளி ஏரி நிரம்பியது. இதில் வெளியேறிய உபரிநீர் கோடியூரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது உடையாண்டஅள்ளி ஏரி. இந்த ஏரி 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த 1991-ம் ஆண்டு இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அதன்பிறகு நீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்பால் இந்த ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராயக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் உடையாண்டஅள்ளி ஏரி, 31 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேறி கோடியூரில் உள்ள 40 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
கோரிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற துணை தலைவர் கஞ்சப்பன், வார்டு உறுப்பினர் பூபதி மற்றும் பொதுமக்கள் அங்கு சென்றனர். அவர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாயை தூர்வாரி தண்ணீர் செல்ல வழிவகை செய்தனர். இதையடுத்து மழை வெள்ளம் குறைந்தது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேறு இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.