கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு


கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
x

அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நேற்று மழை கொட்டியதால் பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நேற்று மழை கொட்டியதால் பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பலத்த மழை

தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த ஜூலை மாத மத்தியிலும், இந்த மாத (ஆகஸ்ட்) தொடக்கத்திலும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந் நிலையில் கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, மாண்டியா பகுதிகளில் மீண்டும் பெய்து வரும் கனமழையால் அந்த மாநில அணைகள் நிரம்பி, அதிக அளவு தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு

இந்த தண்ணீர் முக்கொம்பு மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அய்யம்பேட்டை அருகே கரையோர கிராமங்களான அணைக்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. நேற்று மாலை அய்யம்பேட்டை சுற்றுப்புற பகுதிகளிலும், கொள்ளிடம் கரையோர பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கனமழையும் பெய்ததால் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினா்.

மூழ்கும் நிலை

இது குறித்து விவசாயிகள் கூறியதாவதுகடந்த ஜுலை மாதத்திலும், இந்த மாத தொடக்கத்திலும் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் நடவு செய்த குறுவை நெற்பயிர்கள் மூழ்கின. தண்ணீர் வடிந்த பிறகு களை பறித்து, உரமிட்டோம். இந் நிலையில் மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் நெல் பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரும்பு, வாழை பயிர்களை தண்ணீர் சூழ்ந்ததால் வளர்ச்சி இன்றி அப்படியே நின்று விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story