வைகை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


வைகை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. வைகை அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று மாலை தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. நேற்று இரவு 7 மணி அளவில் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அபாய சங்கு 3 முறை ஒலிக்கப்பட்டு, அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

வைகை அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் நீர்வரத்து ஏற்பட்டது. அந்த தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறக்கப்பட்டது. அப்போது வைகை அணையின் பிரதான 7 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தேனி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் உபரியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள், ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம். இதுதொடர்பாக 5 மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.


Next Story