காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளநீர்


காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளநீர்
x

தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு செல்லும் வெள்ளநீரால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

கரூர்

வெள்ளநீர்

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து சுமார் 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி வெள்ள நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்து அடைந்து மேட்டூர் அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும் 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி வெள்ள நீர் மேட்டூர் அணையில் இருந்து அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் வெள்ள நீர் கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் வந்து சேர்ந்தது. வெள்ள நீர் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுச் செல்கிறது. இங்கிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பாதிப்பு ஏற்படும் நிலை

இந்நிலையில் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியை ஒட்டி வெள்ள நீர் செல்கிறது. மேலும் அதிக தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டால் வீடுகளுக்குள் புகுந்து குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.

தவிட்டுப் பாளையத்தில் காவிரி ஆற்றில் அதிகளவு வெள்ளம் வருவதால் காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதையில் புகழூர் வருவாய் தாசில்தார் முருகன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் அன்பழகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உதவியாளர்கள் கொண்ட குழுவினர் காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதையை இரும்பு தடுப்புகள் மற்றும் சீம கருவேல முற்களை வெட்டி போட்டு பாதைகளை அடைந்தனர்.

செல்பி எடுத்து...

பின்னர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி ஆற்றுக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் முற்றிலுமாக அடைத்து பொதுமக்கள் செல்லாதவாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சேலம்- கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை தவிட்டுப்பாளையத்தில் புதிய காவிரி ஆற்றுப்பாலத்தில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், காரில் செல்பவர்கள் ஓரமாக வாகனங்களை நிறுத்திவிட்டு காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு செல்லும் வெள்ள நீரை குடும்பத்தினருடன் பார்த்து ரசித்து செல்பி எடுத்து செல்கின்றனர்.


Next Story