கடல் நீர் புகுந்துவிடாமல் தடுக்க கலங்கரை விளக்கம் ரெயில் நிலையத்தில் வெள்ளத்தடுப்பு கதவுகள்; மெட்ரோ ரெயில் நிறுவனம் நடவடிக்கை


கடல் நீர் புகுந்துவிடாமல் தடுக்க கலங்கரை விளக்கம் ரெயில் நிலையத்தில் வெள்ளத்தடுப்பு கதவுகள்; மெட்ரோ ரெயில் நிறுவனம் நடவடிக்கை
x

சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் கடல் நீர் புகுந்துவிடாமல் தடுக்க ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் கூடிய வெள்ளக் கதவுகள் அமைக்கப்படுகிறது.

சென்னை

வெள்ளத் தடுப்பு சுவர்கள்

சென்னையில் முதல் கட்டமாக 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவையை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வருகின்றனர். அதில் நீர் நிலைகள் அருகில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக அடையாறு ஆற்றங்கரை அருகில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் அடையாறு ஆற்று நீர் புகுந்துவிடக்கூடாது என்பதால், வெள்ளத்தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இதனால் பெரிய மழை பெய்தாலும் ரெயில் நிலையத்துக்குள் நீர் வருவது தடுக்கப்பட்டு உள்ளது.

கலங்கரை விளக்கம்ரெயில் நிலையம்

இந்தநிலையில் சென்னையில் நடந்து வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் சேவையில் 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 29.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவைக்கான சுரங்கம் மற்றும் உயர்த்தப்பட்ட பாதைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கச்சேரி சாலை ரெயில் நிலையம் வழியாக மயிலாப்பூர் ரெயில் நிலையம் வரை 2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணியில் பிளமிங்கோ எந்திரம் ஈடுபட்டு வருகிறது.

பிளாட்பாரத்துக்கு கீழ் தளம்

சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் தான் முதல் கட்டத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ரெயில் நிலையமாகும். அதைவிட பெரிய ரெயில் நிலையமாக 2-ம் கட்டத்தில் கலங்கரை விளக்கம் ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக 414 மீட்டர் நீளமும், 35 மீட்டர் அகலமும் கொண்ட ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.

இங்கு 3 ஆயிரம் பயணிகள் தங்கும் திறன் கொண்டது, பயணிகளுடன் கூடுதலாக ரெயில்களையும் நிறுத்தும் வகையில் 6 தண்டவாளங்கள அமைக்கப்பட்டு, 12 ரெயில்களை நிறுத்த 6 தண்டவாளங்களை கொண்டிருக்கும். 4-வது வழித்தடத்தின் தொடக்க நிலையமாக இருக்கும் கலங்கரை விளக்கம் ரெயில் நிலையம் மட்டுமே பிளாட்பாரத்துக்கு கீழ் தளத்தில் பயணிகள் அமரும் இடம் அமைக்கப்படும் ஒரே ரெயில் நிலையமாகும். ரெயில் நிலையம் கட்டுமானத்துடன் இங்கு வெள்ளத்தடுப்பு கதவுகள் அமைக்கப்படுகிறது.

வெள்ளத் தடுப்பு கதவுகள்

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் (திட்டங்கள்) டி.அர்ச்சுனன் கூறியதாவது:-

ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் ரெயில் நிலையங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வெள்ள வாயில்கள் நிலையத்துக்கு கீழே கட்டப்படும். கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிப்பதை கண்டறிய சென்சார்கள் இருக்கும். அதேபோல், நீர் மட்டம் ஒரு அளவுக்கு மேல் அதிகரித்தால் கடல் நீர் உள்ளே நுழைவதை தடுக்க, ரெயில் நிலையத்தின் 2 நுழைவு பாதைகளிலும், வெள்ளக் கதவுகள் அமைக்கப்படுகிறது.

இதில் கடல் நீர் புகுந்தால் தானாகவே இந்த கதவுகள் மூடி ரெயில் நி லையத்துக்குள் நீர் புகுவதை தடுத்து விடும். கலங்கரை விளக்கம் ரெயில் நிலையத்தின் 2 நுழைவு பாதைகள் அதாவது, கடற்கரை ஓரத்திலும், காமராஜர் சாலையின் எதிர்புறத்திலும் வெள்ள தடுப்பு கதவுகள் கட்டப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story