குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x

குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான சீசன் மந்தமாகவே காணப்பட்டது. சுட்டெரித்த வெயிலால் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைந்த அளவிலேயே விழுந்தது. அவ்வப்ேபாது பெய்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

சீசன் காலம் முடிந்த பிறகும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது.

நேற்று காலையில் இருந்தே குற்றாலத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் மழையும் பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.

மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்று மதியம் 2 மணி அளவில் மெயின் அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அருவியில் நேற்று முன்தினமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய அவர்கள் மற்ற அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள என போலீசார் தெரிவித்தனர்.


Next Story