நெல்லை-தென்காசியில் பரவலாக மழை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு


நெல்லை-தென்காசியில் பரவலாக மழை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பரவலாக மழை

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதலே பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் இரவிலும் சாரல் மழை பெய்தது. அதே நேரம் மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மாதேவி, மணிமுத்தாறு, நெல்லை, பாளையங்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மதியம் 2.30 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி கிடந்தது. மேலும் நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் சேறும் சகதியுமாக மாறி மக்கள் நடமாட முடியாத அளவுக்கு மோசமாக காணப்படுகின்றன.

மழை அளவு

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆவுடையானூர், கடையம் ராமநதி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது

நேற்று காலை நிலவரப்படி அதிகப்பட்சமாக மாஞ்சோலை ஊத்து பகுதியில் 158 மில்லி மீட்டர் (15.8 செ.மீ.) மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாலுமுக்கு பகுதியில் 13.2 செ.மீ., காக்காச்சி பகுதியில் 11.7 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

களக்காடு-12.20, பாளையங்கோட்டை-10, பாபநாசம்-13, அம்பை-8, சேரன்மாதேவி-7, மணிமுத்தாறு-9, நாங்குநேரி-9, ராதாபுரம்-3, நெல்லை-5, சேர்வலாறு-5, கன்னடியன் கால்வாய்-8.60, கொடுமுடியாறு-7, நம்பியாறு-5

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

மாஞ்சோலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், தலையணைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்படுவதாக வனச்சரகர் பிரபாகரன் அறிவித்து உள்ளார்.

இதையடுத்து தலையணை நுழைவு வாயில், கட்டண வசூல் மையம் மற்றும் சோதனை சாவடி மூடப்பட்டு, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.



Next Story