சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: முட்டல் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு மழைவெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிக்கு விடுமுறை


சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் முட்டல் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைவெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சேலம்

முட்டல் நீர்வீழ்ச்சி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தில் இருந்து வடக்கே 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது முட்டல் ஏரி. இதன் வடபுறம் ஆனைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முட்டல் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் முட்டல் ஏரி நிரம்பி உள்ளதால் அதனை சுற்றியுள்ள கல்லாநத்தம், அம்மம்பாளையம், துலுக்கனூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளிக்கு விடுமுறை

ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செல்லபிப்ளை ஏரி, பெரமச்சூர் ஏரி, முத்துநாயக்கன்பட்டி ஏரி உள்ளிட்டவை நிரம்பி உபரிநீர் வெளியேறியது. அவ்வாறு வெளியேறிய உபரிநீர் முத்துநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி திடல் வழியாக அங்குள்ள வாய்க்காலுக்கு கரைபுரண்டு ஓடியது. பள்ளி முன்பு மழைவெள்ளம் தேங்கி கிடந்தது. இதனால் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டதால் பள்ளிக்கூடத்துக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இதுதவிர விளையாட்டுதிடல், பூங்கா மற்றும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. மழைவெள்ளம் பாதித்த இடங்களை தாசில்தார் வல்லமுனியப்பன் மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர்.

தரைப்பாலம் உடைந்தது

வலசையூர் அருகே பள்ளிப்பட்டி கிராமத்தில் காரைக்காடு பகுதிக்குச் செல்லும் சாலை கனமழையால் சேதமடைந்தது. காரைக்காடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் அவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் சென்று வந்தனர். இதுதவிர குப்பனூர் ஊராட்சி மூக்கனூர் பகுதியில் திருமணிமுத்தாறு பாலம் உள்ளது. இந்த பாலம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த ஊரில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். உடைந்த பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எடப்பாடி

தேவூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை நேற்று சற்று ஓய்ந்தது. மழைவெள்ளம் சூழ்ந்து இருந்த இடங்கள் இயல்பு நிலை திரும்பின. அதே நேரத்தில் தென்னை, வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எடப்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை மற்றும் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கொட்டாபுலியூர் ஏரி, வெள்ளாளபுரம் ஏரி, செட்டிமாங்குறிச்சி, அமிர்தகுளம், எடப்பாடி பெரிய ஏரி உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. இதுதவிர நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியே செல்வதால் பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


Next Story