எடப்பாடி அருகே சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்


எடப்பாடி அருகே  சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
x

சமீபத்தில் பெய்த தொடர் மழையால், எடப்பாடி பகுதியில் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சரபங்கா நதியின் முகத்துவார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

சேலம்

எடப்பாடி,

வெள்ளப்பெருக்கு

சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மலையில் இருந்து உருவாகும் சரபங்கா நதி, ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி மற்றும் எடப்பாடி வழியாக பாய்ந்தோடி காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் நீர்வழிப்பாதைகளில் பல்வேறு இடங்களில், முட்புதர்களும், ஆகாயத்தாமரை செடிகளும் அதிக அளவில் மண்டி கிடப்பதால், வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆற்றில் பாய்ந்து வரும் உபரிநீர் வெளியேற முடியாமல் அருகில் உள்ள குடியிருப்புகளில் சூழ்ந்து நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புகளை சூழ்ந்தது

குறிப்பாக எடப்பாடி அருகே உள்ள க.புதூர் அரசு பள்ளி பின்புறம் மற்றும் அரசு நூல் நிலைய குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் மழைநீருடன், சாயக்கழிவு நீரும் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பதால் அப்பகுதியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

இதேபோல் சரபங்கா நதி அருகே அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள நைனாம்பட்டி பகுதியில் பல வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இப்பகுதியில் ஆய்வு செய்து இங்கு தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுச்சுவர் இடிந்தது

தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக சுற்றுச்சுவர் 10 அடி உயரத்தில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் தெற்கில் உள்ள சுவர் நள்ளிரவில் சுமார் 30 அடி தூரம் சரிந்து அருகில் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது.

இதில் கம்பம் முறிந்து கீழே விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. இதுபற்றி அதிகாலையில் தகவல் அறிந்து வந்த மின்சார ஊழியர்கள் மின்கம்பத்தை சரி செய்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி கிராமம் புகையிலைகாரன் தெருவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் மழைநீர் வெளியேற உரிய பாதுகாப்பு மற்றும் சாக்கடை வசதி செய்து கொடுக்கவில்லை என்று கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தாரமங்கலத்தில் இருந்து இரும்பாலை செல்லும் பிரதான சாலையில் பவர் கேட் அருகே சாலைக்கு 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து தகவலறிந்த தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேட்டூரில் பலத்த மழை

மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று மேட்டூரை அடுத்த மாதையன் குட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஒரு சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்ததால் அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்கள் மழைநீரில் நனைந்தன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மாதையன் குட்டை ராஜாஜி நகர் பகுதியில் நேற்று இரவில் பெய்த மழையால் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள காரை மழை நீர் சூழ்ந்தது. மேலும் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story