குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது


குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது
x

குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை

கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களின் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது.

வெள்ளப்பெருக்கு

தென் மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. கடந்த சில நாட்களாக வரும் நீரின் அளவு கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து அதிகபட்சமாக 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து நேற்று மாலை 55 ஆயிரம் கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்தாலும், தமிழகத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பவானி, அமராவதி ஆறுகளின் மழை நீரும், பல சிறிய ஆறுகளும் காவிரி ஆற்றில் கலக்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீராலும், மற்ற ஆறுகளின் மழை நீராலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரின் பெருமளவு முக்கொம்பிலிருந்தும், கல்லணையிலிருந்தும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுவது வழக்கம். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கியது.

குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது

இதனால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கினால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, உள்ளிக்கடை ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு மளமளவென ஆற்றின் நீர்மட்டம் உயர தொடங்கியது. இதனால் கரையோர கிராம மக்கள் பீதியடைந்தனர். பலரும் தங்கள் கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். பட்டுக்குடி கிராமத்தின் முருகன் கோவிலையும், ரேசன் கடையையும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கினால் இந்த பகுதியில் ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கியுள்ளது.

பயிர்கள் அழுகும் அபாயம்

இந்த பகுதியில் தற்போது நடவு செய்துள்ள குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது. சில இடங்களில் அறுவடைக்கு தயாரான முன் பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. மூன்றாவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் மூழ்கியதால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்குடன், தற்போது இந்த பகுதியில் மிதமான மழையும் பெய்வதால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


Next Story