கரையோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது


கரையோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது
x

கரையோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ஆற்றின் கரைகள் உடையும் அபாயம் உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூரிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் கொள்ளிடம் அருகே ஆற்றுப்படுகை கிராமங்களான நாதல்படுகை, திட்டுபடுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல், நடுத்திட்டு ஆகிய கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது.

இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் கரையோரம் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, தக்காளி, வெண்டை, மிளகாய், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட தோட்ட பயிர்களும், முல்லை, மல்லி, காக்கரட்டான், செண்டி பூ உள்ளிட்ட பூச்செடிகளும் தண்ணீர் சூழ்ந்து சேதமடைந்து வருகின்றன.

கிராமங்களை விட்டு வெளியேறிய மக்கள்

ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால் கரையோர கிராமங்களில் தண்ணீர் மேலும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் முதலைமேடுதிட்டு, நாதல் படுகை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் மூட்டை, முடிச்சுகளுடன் ஆடு, மாடு மற்றும் செல்ல பிராணிகளுடன் நேற்று கிராமங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

அளக்குடி, முதலைமேடுதிட்டு, அனுமந்தபுரம், கொள்ளிடம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் சூழ்ந்து கொண்டிருக்கும் திட்டுப்படுகை, நாதல்படுகை மற்றும் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே உள்ள குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கரைகள் உடையும் அபாயம்

காட்டூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் இரு கரையையும் தொட்டு செல்வதால் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்து விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். கொள்ளிடம் ஆற்றுக்குள் வடிகால் நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கதவணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமத்துக்குள் புகுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். கொள்ளிடம் ஆற்றில் இருகரைகளையும் வெள்ள நீர் சூழ்ந்து செல்கின்றது. மேலும் கூடுதல் தண்ணீர் திறந்து விட்டால் கொள்ளிடம் ஆற்றின் கரைகள் உடையும் அபாயம் உள்ளது. ஆற்றின் கரைகளை பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எந்த அசம்பாவிதமும் ஏற்படாதவாறு பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.


Next Story