ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மலர் அஞ்சலி


ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மலர் அஞ்சலி
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மகாத்மா காந்தியின் அஸ்தியானது கடந்த 1949-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12-ந் தேதி சர்வோதயா மேளாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 75-வது ஆண்டு சர்வோதய மேளா தினத்தையொட்டி சர்வோதய மேளா கமிட்டியின் சார்பில் காந்தியின் உருவப்படத்துடன் அக்னி தீர்த்த கடலில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வோதய மேளா கமிட்டி தலைவர் ஆண்டியப்பன், செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலகார்த்திகேயன், காந்திநிகேதன் ஆசிரமத்தை சேர்ந்த ராஜேந்திரன், அம்மன் சன்னதி காந்தி சிலை கமிட்டி தலைவர் சிதம்பர பாரதி, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி முருகேசன், முன்னாள் உதவி பொது மேலாளர் மீனாட்சி சுந்தரம், ராமேசுவரம் சர்வோதய மேளா கமிட்டி தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் அக்னி தீர்த்த கடலில் மகாத்மா காந்திக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காந்தியின் உருவ படத்துடன் கோவிலை சுற்றி அமைதி ஊர்வலம் வந்தனர். பின்னர் சர்வ சமய பிரார்த்தனை மற்றும் நூற்பு வேள்வி நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட சர்வோதயா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் காந்தி அன்பர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story