நாகரிக பெண்கள் சூட மறுக்கும் கனகாம்பரம்


நாகரிக பெண்கள் சூட மறுக்கும் கனகாம்பரம்
x
தினத்தந்தி 24 April 2023 9:00 PM GMT (Updated: 24 April 2023 9:00 PM GMT)

நாகரிக பெண்கள் சூட மறுக்கும் கனகாம்பரம்

திண்டுக்கல்

இதழ் விரித்து சிரிக்கும் மலர்களை காலையில் கண்டால் நாள் முழுவதும் கவலையே இருக்காது. அதையே, 'மலரை கண்டு மலராத முகமும் உண்டோ' என்று கூறுகின்றனர். மலர்களை காண்பதால் கண்கள் குளிர்ந்து, உள்ளம் கனிந்து, உடல் சிலிர்த்து எதிர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதை உணரலாம்.

மலர்களின் மணம்

மலர்கள் வீசும் மணம், எவரையும் எளிதில் வென்றிடும் வல்லமை கொண்டது. இத்தகைய மலர்களை, பெண்களுக்கு உவமையாக கூறி கவிதை பாடுவது கவிஞர்களின் புலமை. அதேபோல் பெண்களின் கூந்தலில் இடம்பிடித்ததை போன்று, அவர்களின் விருப்ப பட்டியலில் நிரந்தர இடம்பிடித்து இருப்பதும் மலர்கள் தான்.

ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு மணம் உண்டு. மல்லிகை, முல்லை, தாழம்பூ, ரோஜா, செவ்வந்தி என பூக்களின் பட்டியலை அடுக்கி கொண்டே செல்லலாம். வீசும் நறுமணமே பூக்களின் மீதான விருப்பத்தை அதிகரிக்கிறது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து பெண்களும் தலையில் சுட நினைப்பது மணம் வீசும் மலர்களையே.

கனகாம்பரம்

ஆனால் மணம் இல்லாத மலரையும் கூந்தலில் சூடும் பழக்கம் பெண்களிடம் தொன்றுதொட்டு இருக்கிறது. அது இளம்சிவப்பு நிறத்தில் இதழ் சிவந்து அழைக்கும் கனகாம்பரம் பூக்கள் என்றால் அது மிகையல்ல. கனகாம்பரம் பூக்களுக்கு பிற பூக்களை போன்று ஈர்க்கும் வகையில் மணம் இல்லை. ஆனால் பெண்களின் மனதை ஈர்க்க தவறியது இல்லை.

ஒருவர் கூந்தலில் சூடிய மல்லிகைப்பூ 4 வீடுகளை தாண்டி மணம் வீசும். அத்தகைய மல்லிகை பூக்களை, கூந்தல் மறையும் அளவுக்கு சூடி இருந்தாலும், கையளவு கனகாம்பரம் வைத்தால் அது ஒரு அழகு. இதனால் மல்லிகை பூக்களை சூடும் பெண்கள் அனைவரும் கனகாம்பரம் பூக்களை கட்டாயம் சூடிக்கொள்வார்கள்.

சினிமா பாடல்

திருமண விழா, திருவிழா என்றால் பெண்கள் மல்லிகை பூக்களுடன், கனகாம்பரம் பூக்களையும் சூடாமல் வெளியே வரமாட்டார்கள் என்று கூறும் அளவுக்கு இருந்தது. அதை பார்த்து பொறாமை கொண்ட பெண்களும், அதை கண்டு பெருமை கொண்ட பெண்களும் நிறைய உண்டு. பெண்களின் மனதிலும், கூந்தலிலும் இடம்பிடித்த கனகாம்பரம் பூக்கள் கவிஞர்களின் பாடல்களிலும் இடம்பிடித்து இருக்கிறது.

மல்லிகை, முல்லை, தாமரை, ரோஜா உள்ளிட்ட பூக்களின் வரிசையில் 'காதோரம் கனகாம்பரம் தெருவோரம் காதல் வரும்' என்று ஒரு சினிமா பாடலும் அமைந்து இருக்கிறது. இந்த பாடல் நடிகர் விஜயகாந்த் நடித்த 'புதுபாடகன்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இத்தகைய கனகாம்பரம் பூக்கள், நாகரிக பெண்களின் கூந்தலில் பார்ப்பது அரிதாகி வருகிறது.

நாகரிக பெண்கள்

சிறுமிகள், இளம்பெண்கள் பூக்களை அதிகம் விரும்பு சூடிக்கொள்வது இயல்பு. தலைவாரி, பின்னலிட்டு பூக்களை சூடிக்கொள்வதை போன்று, பின்னலிடாமல் பூக்களை சூடிக்கொள்வதும் உண்டு. ஆனால் நாகரிகம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் இளம்பெண்கள் கூந்தலை விரிகோலமாக (லூஸ்கேர்) தொங்கவிடுவதை விரும்புகின்றனர்.

நாகரிக ஆடைகளை அணிவதற்கு அதுவே பொருத்தமாக இருப்பதாக நினைக்கின்றனர். மேலும் நாகரிக பெண்ணாக இருக்க விரும்புபவர்கள் கனகாம்பரம் பூக்களை சூடிக்கொள்ள விரும்புவது இல்லை. நாகரிக ஆடை மட்டுமின்றி சேலை அணியும் பெண்கள் கூட, ஈர்க்கும் மணமில்லாத கனகாம்பரம் பூக்களை சூட விரும்பாத நிலை உள்ளது.

வசந்தத்தை தேடுது

திருமண வீடுகளில் மட்டுமே மல்லிகையுடன், கனகாம்பரம் சூடிய பெண்களை பார்க்க முடிகிறது. அதுவும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிக அளவில் கனகாம்பரம் பூக்களை சூடுகின்றனர். இதனால் திருமணம், திருவிழா காலங்களை தவிர மற்ற நாட்களில் கனகாம்பரம் பூக்களை வாங்குவதற்கு பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

இதன் காரணமாக கனகாம்பரம் பூக்களின் விலை திருமண நாட்களில் கிலோ ரூ.1,000 ஆக உயர்வதும், சாதாரண நாட்களில் ரூ.200-க்கு கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையும் உள்ளது. இதனால் விவசாயிகளும் கனகாம்பரம் பூக்களை சாகுபடி செய்வதற்கு தயக்கம் காட்டும் நிலை உள்ளது. ஒருசிலர் கனகாம்பரம் செடிகளை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.

தமிழகத்தின் ஹாலந்து என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் கனகாம்பரம் பூக்களின் விற்பனையும், சாகுபடி பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் "வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது" என்று சோக கீதம் பாடும் நிலைக்கு கனகாம்பரம் பூக்களின் நிலை சென்று கொண்டிருக்கிறது.

இதுகுறித்து பெண்களிடம் கருத்து கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

நாகரிகம் கருதி தவிர்ப்பு

சத்யா (திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி):- பெண்கள் தலையில் பூக்களை சூடிக்கொண்டால் மிகவும் அழகாக இருக்கும். இதனால் தொன்றுதொட்டு தமிழ் பெண்கள் பூக்களை சூடிக்கொள்கின்றனர். ஆனால் நாகரிக வளர்ச்சியால் இளம்பெண்கள் பூக்களை சூடிக்கொள்வதை தவிர்க்கின்றனர். அதிலும் மல்லிகை போன்று மனதை ஈர்க்கும் மணம் இல்லாத கனகாம்பரம் பூக்களை இளம்பெண்கள் விரும்புவது இல்லை. கனகாம்பரம் பூக்களை சூடினால் நாகரிக பெண்ணாக இருக்காது என்று நினைக்கின்றனர். கனகாம்பரம் பூக்களை சூடிக்கொண்டால் அழகாக இருக்கும்.

100-க்கு 10 பேர் கூட இல்லை

சுதா (நத்தம் ஊராளிப்பட்டி):- நான் பள்ளி செல்லும் போது மல்லிகை பூக்களுடன் கனகாம்பரம் பூக்களையும் சேர்த்து சூடிக்கொண்டு செல்வேன். என்னை போன்ற சக மாணவிகளும் அவ்வாறு தான் பூக்களை சூடிக்கொள்வார்கள். ஆனால் தற்போது மாணவிகள் மட்டுமின்றி இளம்பெண்களில் கூட 100-க்கு 10 பேர் கூட மல்லிகை மற்றும் கனகாம்பரம் பூக்களை சூடிக்கொள்வது இல்லை. அதேபோல் பூ வியாபாரிகள் கூட மல்லிகை, முல்லை, ரோஜா என பிற பூக்களை தான் விற்க கொண்டு வருகின்றனர். பெண்கள் கூந்தலில் பூக்களை சூடிக்கொள்வது மனதுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

இவ்வாறு கூறினர்.


Related Tags :
Next Story
  • chat