மல்லிகைப்பூ கிலோ ரூ.400-க்கு விற்பனை
திருப்பூர் பூ மார்க்கெட்டில் 2 நாட்களுக்கு முன்பு ரூ.600-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று கிலோவுக்கு ரூ.200 விலை குறைந்து ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.மற்ற பூக்களின் விலையும் குறைந்தது.
வரத்து அதிகரிப்பு
பொதுவாக பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த தினங்களிலும் பூக்களின் தேவை அதிகரிப்பதால் பூக்களின் விலை தாறுமாறாக உயரும். வைகாசி மாதத்தில் சுபமுகூர்த்த தினம் அதிகம். தற்போது வைகாசி மாதம் என்பதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ விலை அதிகரித்து கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று(திங்கட்கிழமை) தேய்பிறை முகூர்த்தம் என்பதாலும், பூக்களின் வரத்து அதிகரித்ததன் காரணமாகவும் கிலோவுக்கு ரூ.200 குறைந்து நேற்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் இதர பூக்களின் விலைகளும் குறைந்தது.
பூக்களின் விலை நிலவரம்
திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட பூக்களின் விலை விவரங்கள்(ஒரு கிலோ) வருமாறு:-
மல்லிகைப்பூ ரூ.400, முல்லை ரூ.160, ஜாதிப்பூ ரூ.400, அரளி ரூ.90, சம்பங்கி ரூ.30, செண்டு மல்லி ரூ.60, ரோஸ் ரூ.160, கனகாம்பரம் ரூ.120, கோழிக்கொண்டை ரூ.60, செவந்தி ரூ.240, ஒரு தாமரைப்பூ ரூ.20, ஊட்டி ரோஸ் ஒரு கட்டு ரூ.50. பூக்களின் விலை குறைந்ததால் பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து பூ வாங்கிச் சென்றனர்.