சென்னையில் கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி


சென்னையில் கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி
x

சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் வசிப்பவர்கள் நலன் கருதி முதன் முறையாக சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கி வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இன்று காலை 10 மணி அளவில் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். இதில் ரோஜா மற்றும் பாரம்பரிய மலர்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து ஆண்டு தோறும் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

4 லட்சம் மலர்கள்

ஊட்டியில் மலர் கண்காட்சியும், குன்னூர் சிமஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும், கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் நறுமணப்பயிர்கள் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. ஆனால் சென்னையில் நடத்தப்படும் கண்காட்சி மலர், பழம், காய்கறி மற்றும் நறுமணப்பயிர்களுடன் கூடிய கண்காட்சியாக நடத்தப்படுகிறது.

மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்டுள்ள பகுதி பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர செல்பி எடுக்கும் பகுதி, மலர் வளைவுகள், மலர் தொட்டி அடுக்குகளால் ஆன வடிவமைப்புகள் அமைக்க சுமார் 4 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இவை, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனே போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு கட்டண சலுகை

மலர்களால் ஆன பஸ், இருக்கைகள், தேர் மற்றும் நறுமணப் பொருட்களான கிராம்பு, ஏலக்காயால் செய்யப்பட்ட மாடு மற்றும் விவசாயிகளின் உருவம், இலக்கியம் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. 3 நாட்கள் நடக்கும் கண்காட்சியை பார்வையிட காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். நுழைவு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். இதில் மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் தமிழக சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், வேளாண்மை உற்பத்தி கமிஷனர் சி.சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.பிருந்தாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story