ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கியது; சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
ஊட்டியில் புகழ்பெற்ற 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி,
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடைபெற்றது.
தொடர்ந்து ஊட்டியில் புகழ்பெற்ற 125-வது மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
விழாவில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியரும், நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான் சல்லிவனின் சந்ததியினருமான ஓரியல் சல்லிவன் கலந்துகொண்டார்.
பிரமாண்ட மயில் சிற்பம்
மலர் கண்காட்சியில் சிறப்பு அலங்காரமாக 80 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 40 அடி அகலம், 48 அடி உயரத்தில் தேசிய பறவையான மயில் சிற்பம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு சின்னங்களான தமிழ் மரவன், பட்டாம்பூச்சி, மரகதப்புறா, வரையாடு, பனைமரம், செங்காந்தள் மலர், பரதநாட்டிய கலைஞர் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த அலங்காரங்கள் 70,000 மலர்களை கொண்டு அமைக்கப்பட்டு இருக்கின்றன.
சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ஊட்டி 200-வது ஆண்டு, 125-வது மலர் கண்காட்சி, தாவரவியல் பூங்கா தொடங்கி 175-வது ஆண்டு ஆனதை நினைவுகூரும் வகையில், மலர் அலங்காரங்கள் இடம் பெற்று உள்ளன.சிறப்பு அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், உற்சாகத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்ணுடன் மஞ்சப்பை, சர்வதேச சிறு தானிய ஆண்டையொட்டி விழிப்புணர்வு சின்னம் மற்றும் 30 ஆயிரம் மலர்களை கொண்டு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு உள்ளது.
சிறுத்தை, டால்பின், பாண்டா கரடி, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், கடற்பசு அலங்காரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
கலைநிகழ்ச்சிகள்
மலர் மாடத்தில் லில்லியம், மேரிகோல்டு கெரலிக்கோனியா உள்பட 30 ரகங்களை சேர்ந்த 35 ஆயிரம் பூந்தொட்டிகள், 125 நாடுகளின் தேசிய மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.