பலத்த காற்றால் பூக்கள் உதிர்வு அதிகரிப்பு
பலத்த காற்றால் பூக்கள் உதிர்வு அதிகரிப்பு
போடிப்பட்டி
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசு வருவதால் காய்கறிகள் சாகுபடிகள் பூக்கள் உதிர்வு அதிகரித்து விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர்.
காய்கறிகள் சாகுபடி
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது இங்கு தென்னை, கரும்பு, வாழை, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தவிர தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்துள்ளதும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால் காய்கறிகள் விலை உயரத் தொடங்கியுள்ளது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.
பயிர் சேதம்
கடந்த சில நாட்களாக மடத்துக்குளம் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இதனால் காய்கறிகள் சாகுபடியில் பயிர் சேதம், பூ உதிர்வு உள்ளிட்ட பல விதங்களில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறை, பருவநிலை மாறுபாடு, இடுபொருட்கள் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு போதிய விலை இன்மை உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக காய்கறிகள் சாகுபடியில் பலவிதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் சற்று விலை உயர்ந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.
இதனால் பூக்கள் பெருமளவு உதிர்ந்து விடுவதால் வரும் நாட்களில் கடும் மகசூல் இழப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பொதுவாக ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிக அளவில் இருக்கும்.ஆனால் நடப்பு ஆண்டில் வைகாசி மாதக் கடைசியிலேயே காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.