கோவையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு


கோவையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:16:59+05:30)

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,200-க்கு விற்பனையானது.

கோயம்புத்தூர்

கோவை

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,200-க்கு விற்பனையானது.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள், பூ, பழம் போன்றவற்றை அதிகமாக பொதுமக்கள் வாங்கி செல்வார்கள். இதனால் பூக்கள் உள்பட பொங்கல் பொருட்களின் விலை உயர்ந்து காணப்படும்.

இந்த ஆண்டு கடும் பனி காரணமாக பொங்கல் பண்டிகைக்கு முன்பே ஓரிரு மாதங்களாக பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. இந்தநிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக கடும் பனி காரணமாக பூக்களின் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது.

மல்லிகை பூ ரூ.3,200 விற்பனை

கோவை பூமார்க்கெட்டுக்கு தற்போது மல்லிகைப்பூ வரத்து முற்றிலுமாக குறைந்து உள்ளது. இதனால் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,200-க்கு விற்பனையானது. மல்லிகைப்பூ வரத்து குறைந்த நிலையில், முல்லைப்பூ கிலோ ரூ.2,400-க்கும், ஜாதிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும், காக்கட்டான் (வாசனையில்லாத மல்லி) கிலோ ரூ.1,600-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரையிலும், பட்டன் கலர்ரோஸ் வகைகள் கிலோ ரூ.240-க்கும், செண்டு மல்லி ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. மேலும் தாமரை பூ ஒன்றின் விலை ரூ.25-க்கும் விற்பனையானது.

இது குறித்து பூ வியாபாரி ஒருவர் கூறுகையில், கடும் பனியின் காரணமாக பூக்கள் செடியிலேயே கருகிவிடுகிறது. இதனால் அவற்றின் வரத்து குறைந்து காணப்படுகிறது. பொதுவாக பொங்கல் பண்டிகை காலங்களில் பனி நிறைந்து இருப்பதால் வழக்கமாக பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு அதிகளவு பனி இருப்பதால் வரத்து வெகுவாக குறைந்து உள்ளதாலும் பண்டிகை காலத்தில் தேவை அதிகளவு இருப்பதாலும் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.


Next Story