பிரதோஷத்தையொட்டிநாமக்கல்லில் பூக்கள் விலை உயர்வு
பூக்கள் விலை விவரம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.
கடந்த சில நாட்களாக பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பிரதோஷத்தையொட்டி சற்று உயர்ந்து காணப்பட்டது. அதன்படி கடந்த வாரம் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.240-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
விவசாயிகள் கவலை
இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ.40-க்கும், கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ.100-க்கும் விற்பனையானது.
நேற்று பிரதோஷம் என்பதால் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதனால் பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும் இந்த விலை போதுமானதாக இல்லை என பூ விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.