பூக்கள் விலை கிடுகிடு உயர்வு: குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை
நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.
பூக்கள்
கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், பேச்சிப்பாறை, நடையனூர், வேட்டமங்கலம், குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், மூலியமங்கலம், புதுகுறுக்குபாளையம், பழமாபுரம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
பூக்கள் விளைந்தவுடன் பறித்து, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். அதனை வியாபாரிகள் வாங்கி பல்வேறு வகையான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்கின்றனர்.
கிடுகிடு உயர்வு
இந்தநிலையில் நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் விசேஷங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்விவரம் கிலோ அளவில் பின்வருமாறு:-
கடந்த வாரம் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.500-க்கு விற்றது தற்போது ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.50-க்கு விற்றது ரூ.100-க்கும், அரளி ரூ.60-க்கு விற்றது ரூ.100-க்கும், ரோஜா ரூ.140-க்கு விற்றது ரூ.200-க்கும், முல்லை ரூ.400-க்கு விற்றது ரூ.700-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கு விற்றது ரூ.220-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கு விற்றது ரூ.600-க்கும் விற்பனையானது.
இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.