ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பூக்கள் விலை; மல்லிகைப்பூ கிலோ ரூ.5 ஆயிரம்


ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பூக்கள் விலை; மல்லிகைப்பூ கிலோ ரூ.5 ஆயிரம்
x

திண்டுக்கல், ஆண்டிப்பட்டியில் வரத்து குறைவால் பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல், ஆண்டிப்பட்டியில் வரத்து குறைவால் பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

பூக்கள் வரத்து குறைவு

திண்டுக்கல்லில் இருந்து பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது.

இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியதால் பூக்கள் தேவை அதிகரித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்கள் மலர்வது குறைந்தது. இதனால் பூக்களின் விலை உயர்ந்தபடி இருந்தது.

இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருமண முகூர்த்தநாள் ஆகும். இதையொட்டி இன்று விவசாயிகள் அனைத்து வகையான பூக்களையும் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர்.

இதேபோல் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகாலையிலேயே திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் குவிந்தனர். மேலும் போட்டி போட்டு பூக்களை வாங்கினர். ஆனால் மல்லிகைப்பூ உள்பட பெரும்பாலான வகை பூக்கள் குறைந்த அளவே வந்து இருந்தன.

விலை உயர்வு

இதனால் பூக்களில் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதில் மல்லிகைப்பூவை பொறுத்தவரை கிலோ ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் விரை விற்பனை ஆனது. இதேபோல் கனகாம்பரம் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், முல்லைப்பூ ரூ.1,450-க்கும், ஜாதிப்பூ ரூ.1,200-க்கும் விற்றது.

இதுதவிர சம்பங்கி ரூ.350-க்கும், ரோஜாப்பூ ரூ.130-க்கும், கோழிகொண்டை ரூ.60-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், காக்கரட்டான் ரூ.1,300-க்கும், செவ்வந்தி ரூ.100 முதல் ரூ.120 வரையிலும், வாடாமல்லி ரூ.50-க்கும், மரிக்கொழுந்து ரூ.120-க்கும், அரளிப்பூ ரூ.150-க்கும், ஒரு தாமரைப்பூ ரூ.50-க்கும் விற்பனை ஆனது.

ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்

இதேபோல் தேனி மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மல்லிகை பூக்கள் செடிகளிலேயே கருகி விடுகின்றன. மேலும் மார்க்கெட்டிற்கு மல்லிகைப்பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக மல்லிகைப்பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. இந்தநிலையில் இன்று அதன் விலை கிலோ ரூ.5 ஆயிரமாக உயர்ந்தது. வரத்து குறைந்ததால் பூக்களை வாங்க வியாபாரிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனையடுத்து வியாபாரிகளுக்கு இடையே ஏலம் நடத்தப்பட்டு பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.


Related Tags :
Next Story