பொள்ளாச்சியில் பூக்கள் விற்பனை மந்தம்
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், பொள்ளாச்சியில் பூக்கள் விற்பனை மந்தமாக நடந்தது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
பொள்ளாச்சி
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், பொள்ளாச்சியில் பூக்கள் விற்பனை மந்தமாக நடந்தது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
ஓணம் பண்டிகை
மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி அவர்கள் வகை, வகையாக பூக்களை வாங்கி அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள்.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக விலை குறைந்தது. ஆனால் விற்பனை மந்தமாக இருந்ததால், வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
3 மடங்கு அதிகம்
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி திண்டுக்கல், நிலக்கோட்டை, சத்தியமங்கலம், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகைக்கு பூக்கள் விற்பனை களைகட்டும். பாலக்காடு, திருச்சூர், கொல்லங்கோடு பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு வருவார்கள். ஆனால் தற்போது நேரடியாக கேரளாவிற்கே பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு விற்பனை மந்தமாக இருந்தது. கடந்த ஆண்டை விட 3 மடங்கு(10 டன்) பூக்கள் அதிகமாக கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக விலை அதிகரிக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விலை நிலவரம்
பொள்ளாச்சி தேர்நிலை மார்க்கெட்டில் விற்பனையான பூக்கள் விலை விவரம்(ஒரு கிலோ):-
மல்லிகை ரூ.500 முதல் ரூ.700 வரை, சம்பங்கி ரூ.120 முதல் ரூ.140 வரை, செண்டு மல்லி ரூ.60 முதல் ரூ.80 வரை, கோழிக்கொண்டை ரூ.70 முதல் ரூ.80 வரை, அரளி ரூ.120 முதல் ரூ.150 வரை, வாடாமல்லி ரூ.70 முதல் ரூ.80 வரை, சில்லி ரோஸ் சிவப்பு ரூ.140 முதல் ரூ.150 வரை, சில்லி ரோஸ் மஞ்சள் ரூ.150 முதல் ரூ.160 வரை, முல்லை ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையானது.