மின்சார ரெயிலில் பெண் போலீசை கத்தியால் குத்திய பூ வியாபாரி கைது


மின்சார ரெயிலில் பெண் போலீசை கத்தியால் குத்திய பூ வியாபாரி கைது
x

ஓடும் மின்சார ரெயிலில் பெண் போலீசை கத்தியால் குத்திய பூ வியாபாரி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு கடந்த 23-ந்தேதி இரவு புறப்பட்டு சென்ற மின்சார ரெயிலின் மகளிர் பெட்டியில் ஏறிய நபரை இறங்குமாறு கூறிய பெண் போலீஸ் ஆசிர்வாவை (29), அந்த நபர் கத்தியால் குத்தினார். பின்னர் தனது உயிரை தற்காத்துக்கொள்ள ஆசிர்வா தண்டவாளத்தில் குதித்து உயிர் தப்பினார். அந்த மர்ம நபர் தொடர்ந்து ரெயிலில் பயணித்து தப்பி சென்று விட்டார்.

காயமடைந்த ஆசிர்வா, பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையிலான எழும்பூர் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சி.சி.டி.வி. கேமரா வீடியோ காட்சி பதிவுகளுடன் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

பூ-வியாபாரியின் வாக்குமூலம்

சம்பவத்தன்று ரெயில் நிலையங்களில் சந்தேகத்தின் பேரில் சுற்றிதிரிந்த 10-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை சிகிச்சையில் இருந்து வரும் பெண் போலீசிடம் காட்டி விசாரித்தனர். அதில் ஒரு நபரை அவர் அடையாளம் காட்ட, அவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வரும் தனசேகர் (வயது 40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அவரை போலீசார், பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கைதான பூக்கடை வியாபாரி தனசேகர் பரபரப்பான வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் பின்வருமாறு:-

நான் திண்டிவனம் மாவட்டத்தில் வசித்து வந்தபோது, ரெயில்களில் ஏறி பூ, பழம் மற்றும் ஹெட்போன்கள் போன்றவற்றை வியாபாரம் செய்து வந்தேன். அப்போது, ரெயில்வே போலீசார் வியாபாரம் செய்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து தடுத்து வந்தனர்.

அதிருப்தியில் வெறிச்செயல்

ரெயிலில் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்காமல் இறக்கியும் விட்டுள்ளனர். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக எனது மனைவியுடன் சென்னை பூக்கடை பகுதியில் உள்ள நடைபாதைகளில் தங்கி, பூ மற்றும் பழ வியாபாரம், செல்போன் கவர்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறேன்.

இந்தநிலையில் தான் கடந்த 23-ந்தேதி கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு சென்ற மின்சார ரெயிலில், குடிபோதையில் மகளிர் பெட்டியில் ஏறி உட்கார்ந்திருந்தேன். அப்போது அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஒருவர், என்னிடம் மகளிர் பெட்டியில் ஏறக்கூடாது, இறங்குமாறு கூறினார்.

ஏற்கனவே ரெயில்வே போலீசார் மீது அதிருப்தியில் இருந்த நான், ஒரு இளம்பெண் போலீஸ் என்னை அவமானப்படுத்துவதா? என வெறியடைந்த நான், பூக்களை வெட்டுவதற்கு என வைத்திருந்த கத்தியால் பெண் போலீசின் கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியில் குத்தினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story