நாமக்கல்லில் பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு


நாமக்கல்லில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x

ஆயுத பூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பூக்களின் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்துள்ளது.

நாமக்கல்

பூக்கள் வரத்து அதிகரிப்பு

நாமக்கல் நகரில் உள்ள லாரி பட்டறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆயுதபூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதையொட்டி லாரி பட்டறைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பூ தோரணங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். இதனிடையே நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்து இருந்தது.

முன்னதாக மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூக்களை நாமக்கல் பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வழக்கத்தைவிட பூக்களின் வரத்து நேற்று அதிகரித்து இருந்ததோடு, அவற்றின் விலையும் உயர்ந்தன.

விலை உயர்வு

அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று ரூ.500-க்கும், கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூ ரூ.250-க்கும் விற்பனையானது. அதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.120-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ ரோஸ் பூ நேற்று ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் கடந்த வாரம் அதிகபட்சமாக ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லை பூ, நேற்று ரூ.480-க்கும், ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ, நேற்று ரூ.600-க்கும் விற்பனை ஆனது. கிடுகிடு என விலை உயர்ந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்கி சென்றனர்.


Next Story