வீட்டில் பூத்து குலுங்கிய பூக்களை பறித்து விளையாடிய காட்டு யானை


வீட்டில் பூத்து குலுங்கிய பூக்களை  பறித்து விளையாடிய காட்டு யானை
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டு யானை, வீட்டில் பூத்து குலுங்கிய பூக்களை பறித்து, தனது தலையின் மீது வீசி விளையாடியுள்ளது.

கோயம்புத்தூர்

துடியலூர்

யானைகள் பார்க்க உருவத்தில் பெரியதாக இருந்தாலும், அது செய்யும் குறும்புக்கு அளவே இருக்காது. விளையாட தொடங்கி விட்டால் மண்ணை அள்ளி வீசுவது... மண்ணில் புரழுவது என அட்டகாசம் செய்யும். இப்படிதான் கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் கூட்டத்துடன் உலா வந்த காட்டு யானை, வீட்டில் பூத்து குலுங்கிய பூக்களை பறித்து, தனது தலையின் மீது வீசி விளையாடியுள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

காட்டு யானைகள்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் அருகே உள்ள வைலட் கார்டன் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதி வனப்பகுதியையொட்டி உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகின்றன.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. பின்னர் அந்த யானைகள் வைலட் கார்டன் குடியிருப்புக்குள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் வீதிகளில் வரிசையாக உலா வந்தன.

பூக்களை பறித்து விளையாடியது

இதில், ஒரு யானை மிகுந்த குஷியோடு உலா வந்தது. இந்த யானை வீட்டின் முன்பு இருந்த செடிகள், மரக்கன்றுகளை பிடுங்கி விளையாடியது. அப்போது ஒரு வீட்டில் அலங்காரத்திற்காக தொங்கவிடப்பட்டிருந்த செடியில் பூக்கள் பூத்து குலுங்கியதை காட்டு யானை பார்த்தது.

உடனே அந்த யானை தனது துதிக்கையை வீட்டு, பூச்செடியில் இருந்த பூக்களை பறித்து, தனது தலையின் மீது வீசி விளையாடியது. சிறிது நேரம் வீட்டின் முன்பு நின்றபடி பூக்களை பறித்து விளையாடி யானை பின்னர் அங்கிருந்து சென்றது. பின்னர் அந்த காட்டு யானை தனது கூட்டத்துடன் சேர்ந்த அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

வீடியோ வைரல்

காட்டு யானை பூக்களை பறித்து விளையாடிய காட்சி, அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோவை அந்த வீட்டினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, "இரவு நேரத்தில் தங்கள் வீட்டிற்கு வந்த பெண் (காட்டு யானை) ஒருத்தி, பூக்களை பறித்து சென்றுவிட்டாள் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையில், வைலட் கார்டன் பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story