நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்


நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
x

நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

கோயம்புத்தூர்

கோவை, ஜூலை.

கோவையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் சித்திரை சாவடி அணையில் இருந்து குளங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

தொடர் மழை

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதன்படி கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் மேற்குதொடர்ச்சி மழை ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நொய்யல் ஆற்றில் இருந்து சித்திரை சாவடி அணைக்கட்டிற்கு 450 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் அந்தந்த குளங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. குறிப்பாக சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து 210 கன அடி நீர் ராஜவாய்க்கால் மூலம் கோளராம்பதி, புதுக்குளம், நரசாம்பதி உள்ளிட்ட குளங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

2 குளங்கள் நிரம்பின

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நொய்யல் ஆற்றின் வழியோரம் 24-ற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த ஆண்டு பருவமழை மிகவும் காலதாமதமாக பெய்தது. இதனால் ஒரு சில குளங்களை தவிர பெரும்பாலான குளங்கள் தண்ணீர் வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மழையொட்டிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் சித்திைர சாவடி தடுப்பணையில் இருந்து குளங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

இதில் வேடப்பட்டி புதுக்குளம், கோளராம்பதி குளம் ஆகியவை முழுவதும் நிரம்பி விட்டன. நரசாம்பதி குளத்தில் 50 சதவீமும், பேரூர் பெரியகுளம் 35 சதவீதமும் நிரம்பி உள்ளது. இதுதவிர செங்குளம், சொட்டையாண்டி குட்டை, கங்கா நாரயண சமுத்திரம், குறிச்சி உள்ளிட்ட குளங்களுக்கும் தண்ணீர் சென்று கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கோவை உக்கடம் பெரியகுளம் மற்றும் வெள்ளலூர் பெரிய குளத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றனர்.


Next Story