போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்-மாணவர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுரை
போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுரை வழங்கினார்.
ஊட்டி: போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுரை வழங்கினார்.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல் காணொலி காட்சி மூலமாக, நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் மாதாமாதம் காவல்துறை அதிகாரிகளை கொண்டு போதை பொருட்களை ஒழிக்கவும், இளைய தலைமுறையினரிடையே அதன் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இன்றைய காலத்தில் மாணவர்கள் தேவைப்படும்போது மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கல்வியில் கவனம்
போதை பழக்கத்திற்கு அடிமையான பிறகு அவர்களை மீட்பதை காட்டிலும், அதுபோன்ற பழக்கத்திற்கு ஆளாகாமல் தங்களை தற்காத்து கொள்வது ஒரு சிறந்த முறையாக இருக்கும். போதைப்பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களும் பாதிப்புக்கு ஆளாகுகின்றனர். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். எனவே மாணவர்கள், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் அதிக கவனம் செலுத்தி நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு பேரணி
இதற்கிடையே பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு விழிப்புணர்வை தொடங்கி வைத்தார். இதன்பின்னர் 'நான் முதல்வன் ஓராண்டு வெற்றிப்பயணம்" குறித்த குறும்படத்தை 650-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். முன்னதாக, ஊட்டி ரெயில் நிலையத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.இதில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.