சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்
பொள்ளாச்சியில் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேசியதாவது:-
நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து தொடர்ந்து ஏற்படுகிறது. குறிப்பாக 4 வழிச்சாலைகளில் செல்லும்போது வாகனங்களை எவ்வாறு கையாள்வது? எந்தெந்த பகுதியில் விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்கி செல்வது என்பது குறித்து வாகன ஒட்டிகள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். விதிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டாலே விபத்துகள் குறைந்துவிடும். முக்கிய சாலைகளில் நிர்ணயம் செய்யப்பட்ட வேகத்தில் மட்டும் வாகனத்தை இயக்க வேண்டும். விதிமுறைகளை மீறி மிக அதிக பாரத்தை ஏற்றிச்செல்லக்கூடாது.
குடிபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது. பள்ளி, கல்லூரி முன்பு நிதானமாக செல்ல வேண்டும். மழைக்காலங்களில் வேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது. சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து கோவை தனியார் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் பேசுகையில், விபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது? விபத்து நேரிட்டால் முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிப்பது? என்பது குறித்து பேசினார். கூட்டத்தில் டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.