போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்


போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 May 2023 6:30 AM IST (Updated: 11 May 2023 6:30 AM IST)
t-max-icont-min-icon

விபத்து ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

விபத்து ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு முகாம்

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கிணத்துக்கடவு சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமை தாங்கி பேசியதாவது:-

சாலை விதிகளை முறைப்படி கடைபிடித்தால் சாலை விபத்துகள் குறையும். தற்போது நடைபெறும் சாலை விபத்துகள் பெரும்பாலும் விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் தான் ஏற்படுகின்றன. கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் வாகனங்கள் செல்வதால் தான் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், எதிர்திசையில் மீண்டும் செல்வதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

செயல் விளக்கம்

நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் வாகன ஓட்டிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் சில இடங்களில் பள்ளி வாகனங்களும் எதிர் திசையில் வருவதாக புகார் வந்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்காமல் இருக்கக்கூடாது. சரக்கு ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றி செல்லக்கூடாது. அதேபோல் பயணிகள் ஆட்டோவிலும் சரக்கு ஏற்றி செல்லக்கூடாது.

விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு விபத்து இல்லாத டிரைவர் சான்று வழங்க மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடும் நபரை காப்பாற்றுவது குறித்து டிரைவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், கிணத்துக்கடவு பேருராட்சி செயல் அலுவலர் அப்துல்லா, கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், தனியார் கல்லூரி பஸ் டிரைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story