உணவு வணிக நிறுவனங்கள் உரிமம், பதிவுச்சான்று பெற வேண்டும்
உணவு வணிக நிறுவனங்கள் உடனடியாக உரிமம், பதிவுச்சான்று பெற வேண்டும் என்று கலெக்டர் சமீரன் அறிவுறுத்தி உள்ளார்.
உணவு வணிக நிறுவனங்கள் உடனடியாக உரிமம், பதிவுச்சான்று பெற வேண்டும் என்று கலெக்டர் சமீரன் அறிவுறுத்தி உள்ளார்.
ஆலோசனை குழு கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் 2022-2023-ம் ஆண்டு 3-வது காலாண்டிற்கான மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ் செல்வன், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும், பேக்கரி சங்க நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர்அமைப்பு நிர்வாகிகள், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக உணவு பாதுகாப்பு துறை சார்பில் டாடாபாத் பகுதி வணிகர்களுக்கு தரச்சான்று வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:-
சிறை, அபராதம்
கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் 91 சதவீத மும், பதிவுச்சான்று 92 சதவீதமும் பெறப்பட்டு உள்ளது. 1148 பேர் உரிமம் பெறாமலும், 2691 பேர் பதிவுச்சான்று பெறாமலும் உள்ளனர்.
எனவே உரிமம், பதிவு சான்றை பெறாமலோ, புதுப் பிக்காமலோ வணிகம் செய்யும் வணிக நிறுவனங்கள் உடனடியாக உரிமம், பதிவுச்சான்று பெறவேண்டும்.
உரிமம் பெறாவிட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
உரிமம், பதிவுசான்று பெற மற்றும் புதுப்பிக்க https://foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
உழவர் சந்தைகள்
உணவு வணிகம் செய்யும் தயாரிப்பாளர் மற்றும் மறுபொட்டலம் இடுபவர்கள் தங்களது வருடாந்திர உற்பத்தி விவரங்களை ஒவ்வொரு நிதி ஆண்டு முடிந்தவுடன் மே மாதம் 31-ந் தேதிக்குள் FoSCoS என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் தினமும் ரூ.100 அல்லது அதிகபட்சமாக 5 மடங்கு உரிம தொகை அபராதமாக செலுத்த நேரிடும்.
சுந்தராபுரம் மற்றும் வடவள்ளி உழவர்சந்தைகள் சுத்தமான காய்கறி, பழங்கள் என்ற தரச்சான்று பெறப்பட்டு உள்ளது. ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் உழவர் சந்தைகள் தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.