உணவு வினியோக நிறுவன ஊழியரை தாக்கி செல்போன்-பணம் பறிப்பு


உணவு வினியோக நிறுவன ஊழியரை தாக்கி செல்போன்-பணம் பறிப்பு
x

கோவை டெக்ஸ்டூல் பாலம் அருகே தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியரை தாக்கி செல்போன், பணத்தை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்


கோவை டெக்ஸ்டூல் பாலம் அருகே தனியார் உணவு வினியோக நிறுவன ஊழியரை தாக்கி செல்போன், பணத்தை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உணவு வினியோக ஊழியர்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 25). இவர் கோவையில் தங்கி இருந்து தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 12-ந் தேதி இரவு 11.30 மணிக்கு கணபதி பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு உணவை வினியோகம் செய்துவிட்டு காந்திபுரம் திரும்பினார்.

அவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே வந்தபோது சாலையின் ஓரத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறுநீர் கழித்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று முருகேசனிடம் சென்று பணம் கேட்டனர். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

பணம்-செல்போன் பறிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கியதுடன், அவரிடம் இருந்து செல்போன், ரூ.9,050 மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பின்னர் அவர் இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

கோவையில் கடந்த 11-ந் தேதி பாப்பநாயக்கன்பாளையத்தில் இளைஞரை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

தற்போது மீண்டும் அதேபோல மற்றொரு சம்பவம் நடந்து உள்ளதால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

எனவே இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவான மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story