தைப்பூசத்தை முன்னிட்டு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்: அமைச்சர் தகவல்


தைப்பூசத்தை முன்னிட்டு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்: அமைச்சர் தகவல்
x

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெரம்பூர் செம்பியம் லட்சுமி அம்மன் கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலான ராஜகோபுரம் மண்டப சிற்பங்களை சீரமைத்து வண்ணப்பூச்சு பூசுதல், கருங்கல் தளம் அமைத்தல், அம்மன் சன்னதி மகா மண்டபம், உப சன்னதிகள் பழுது பார்த்தல் போன்ற பணிகளையும்,

வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலில் ரூ.88 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் புனரமைப்பு பணிகளையும், கொருக்குப்பேட்டை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பில் மகா மண்டபம், உற்சவர் மற்றும் நவக்கிரக மண்டபங்கள் கட்டுதல் போன்ற பணிகளையும், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவிலில் ரூ.10 லட்சத்தில் தேர் நிறுத்தும் மண்டப கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

தைப்பூசம்

அதனைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் பேசியதாவது:-

இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 1,500 கோவில்களை புனரமைக்கின்ற பணியினை மேற்கொண்டு வருகின்றோம். அன்னதான திட்டத்தை பொறுத்தவரை அந்தந்த கோவிலின் நிதி ஆதாரத்தை பொறுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் இந்த ஆண்டு 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டத்தையும், 10 கோவில்களில் அன்னதான திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் நபர்கள் வீதம் 20 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவிழா நாட்களில் அதிக பக்தர்கள் வருகின்றார்கள் என்பதால் தினந்தோறும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தங்க நகைகள்

பெரியபாளையம் பவானியம்மன் கோவிலின் நகைகள் சுத்த தங்கமாக மாற்றி 98 கிலோ தங்க முதலீட்டு பத்திரத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு ஆண்டொன்றுக்கு ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் வட்டி தொகையாகவும், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் 28 கிலோ தங்க நகைகள் முதலீடு செய்யப்பட்டு ஆண்டொன்றுக்கு 38 லட்சம் வட்டித் தொகையாகவும் வருகின்றன. அந்தத் தொகை அந்தந்த கோவிலின் மேம்பாட்டிற்கு செலவிடப்படும்.

அதேபோல திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களிலும் பயன்படுத்த இயலாத தங்க நகைகள் நீதிபதி முன்னிலையில் முழுமையாக அளவிடப்பட்டு, சுத்தத் தங்கமாக மாற்றிட தற்போது மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் குறைந்தபட்சம் 4 ஆயிரம் கிலோ தங்கமாவது கோவில்கள் பெயரிலே வைப்பு நிதியாக வைக்கப்படும் சூழல் ஏற்படும்.

அதன் மூலம் கிடைக்கும் வருவாய் கோவில்களை மேம்படுத்த செலவிடப்படும். எத்தனை இடையூறுகள், தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிகின்ற ஆற்றலும் திறமையும் இந்த ஆட்சிக்கு உண்டு என்பதற்கு இந்த பணிகளே எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story