உணவின் தரத்தை கண்காணிக்க வேண்டும்

காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.
ஊட்டி
காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.
ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்ட வளர்ச்சி மற்றும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளருமான வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
நீலகிரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். அதேபோல் நகராட்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்துவதோடு, தூய்மை இந்தியா திட்டம், அம்ருத் திட்டத்தின் கீழ் பணிகளை எடுத்து மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
ஊரக வளர்ச்சி முகமை சார்பில், கிராமங்களின் வளர்ச்சிக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் திட்டம் சார்பில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை விரைந்து முடிக்கவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அனைத்துப்பகுதிகளிலும் உயர் அழுத்தம் உள்ளவர்களை கணக்கெடுத்து, மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும். மேலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
முழு ஈடுபாடு
அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கும் சென்று சேரும் வகையில், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஷ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷிபிலாமேரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.