32 இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
நாகை மாவட்டத்தில் 32 இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
நாகை மாவட்டத்தில் 32 இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
32 இடங்களில் சோதனை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
அதன்படி நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர்.
கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
இந்த ஆய்வில் 2 ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 3 கிலோ கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த 2 ஓட்டல் உரிமையாளர்களுக்கு தலா 1,000 அபராதம் விதித்தனர்.
மேலும் இறைச்சிகளை நீண்ட நாள் பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. இறைச்சிகளில் அதிக கலர் பொடிகளை பயன்படுத்தி விற்பனை செய்யக் கூடாது. அசைவ உணவுகளை தயாரிக்கும் போது பாதுகாப்பான முறைகளை கையாள வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன், சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர் பாலகுரு உள்பட நகராட்சி பணியாளர்கள் திடீரென ஆய்வு செய்தனர். இதில் சுகாதாரமாக பராமரிக்கப்படாத ஓட்டல்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.