ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரி கைது
கோவையில், உரிமத்தை புதுப்பிக்க மளிகை கடைக்காரரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரி வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார்.
கோவை
கோவையில், உரிமத்தை புதுப்பிக்க மளிகை கடைக்காரரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரி வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார்.
மளிகை கடைக்காரர்
கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(வயது 78). அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில், கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலத்தில் அதிகாரியாக பணியாற்றிய வெங்கடேஷ் என்பவர் ஆய்வு செய்தார்.
அப்போது கடையின் உரிமம் காலாவதியாகி இருப்பது தெரியவந்தது. அதை புதுப்பித்து தர துரைசாமியிடம், வெங்கடேஷ் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் அவர் சம்மதம் தெரிவிக்காததால், ரூ.15 ஆயிரம் கொடுக்க கூறினார். அதற்கும் உடன்படாததால், இறுதியாக ரூ.7 ஆயிரம் கேட்டார். அந்த தொகையை மறுநாள் கொடுப்பதாக துரைசாமி கூறினார். இதை ஏற்று வெங்கடேஷ், அங்கிருந்து சென்றார்.
கையும், களவுமாக கைது
எனினும் துரைசாமிக்கு லஞ்சம் கொடுக்க மனமில்லை. இதனால் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்களது அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை பால் கம்பெனி பகுதிக்கு வெங்கடேஷை வரவழைத்து துரைசாமி வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார் கையும், களவுமாக வெங்டேஷை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரை லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.