நாகை பாரதி மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


நாகை பாரதி மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:45 PM GMT)

நாகை பாரதி மார்க்கெட்டில் வாங்கிய மீனில் புழு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கெட்டுப்போன மீனை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

நாகப்பட்டினம்


நாகை பாரதி மார்க்கெட்டில் வாங்கிய மீனில் புழு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கெட்டுப்போன மீனை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

பாரதி மார்க்கெட்

நாகை அண்ணா சிலை அருகே பாரதி மார்க்கெட் உள்ளது. இங்கு நாகை மீன்பிடிதுறைமுகம், சாமந்தான்பேட்டை, நாகூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணதேவராயன் என்பவர் பாரதி மார்க்கெட்டில் மீன் வாங்கி சென்றுள்ளார்.

மீனில் புழு

பின்னர் வீட்டிற்கு சென்று மீனில் மசாலா தடவி தோசை கல்லில் போட்டு பொரிக்கும்போது, மீனிலிருந்து புழுக்கள் வெளியே வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதையடுத்து நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் பாரதி மார்க்கெட்டுக்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை ஆய்வு செய்தனர். அப்போது புழு இருந்த மீனை விற்பனை செய்த நபர் அங்கு இல்லை.

எச்சரிக்கை

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது. உணவு பாதுகாப்புத்துறை உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற வேண்டும்.

கெட்டுப்போன மீன்கள் மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டபூர்வமான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மீன் வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story