குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவு பண்டங்கள்டாக்டர்கள், தாய்மார்கள் கருத்து


குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவு பண்டங்கள்டாக்டர்கள், தாய்மார்கள் கருத்து
x

குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவு பண்டங்கள் குறித்து டாக்டர்கள், தாய்மார்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம்

நமது வீட்டில் சமைக்கிற உணவுகளை மட்டுமே சாப்பிட்டுவந்த காலம் உண்டு. சாதம், இட்லி, தோசை மட்டுமே பிரதான உணவுகளாக இருந்தன.

சோளம், உளுந்து, பயிறு, கடலை, அரிசி ஏதோ ஒன்றை வறுத்துத் தருவார்கள். மிஞ்சிப் போனால் முறுக்கு, சீடை, கடலை மிட்டாய் போன்ற நொறுக்குத் தீனிகளை கடைகளில் வாங்கிச் சாப்பிடுவோம்.

அவை கலப்படம் இல்லாமலும், மண் சார்ந்த உணவுகளாகவும், சுவை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் குறைவில்லாமல் இருந்தன. ஓட்டல்களுக்கு எப்போதோ ஒருநாள் தவிர்க்க முடியாமல் போவது உண்டு.

இப்போது நிலைமை அப்படி அல்ல. ஓட்டல்களுக்கு போவது ஒரு நாகரிகமான, கவுரவமான நடைமுறையாகி விட்டது.

மாறிவரும் உணவு பழக்கம்

பெரும்பாலான வீடுகளில் சமையல் அறைகள் ஓட்டல்களுக்கு போய்விட்டன. வீடுகள் தங்கும் ஓட்டல்களாக மாறிவருகின்றன. இதனால் பல்வேறு ஒவ்வாமைகள், பிரச்சினைகளை உடல்ரீதியாக நாம் சந்திக்க நேர்கின்றன.

குழந்தைகளும் இயற்கையான உணவை விட்டு செயற்கையாக செய்யப்படும் கவர்ச்சியான உணவு வகைகளையே விரும்புகிறார்கள். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், சாக்லெட், லேஸ் போன்ற தின்பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பீசா, பர்கர் போன்ற ரெடிமேடு உணவு வகைகளுக்கும் அடிமையாகி வருகிறார்கள்.

நாகரிம் என்ற பெயரால் மாறிவரும் இந்த உணவு பழக்கங்களால் ஏற்படுகின்ற சாதக பாதங்கள் குறித்து டாக்டர்கள் மற்றும் தாய்மார்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

நோய்கள் ஏற்பட வாய்ப்பு

சேலம் மாவட்ட இந்திய மருத்துவர் சங்க செயலாளரும், குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சிவசங்கர்:-

துரித வகை உணவுகள் ருசியாக இருப்பதால் அவற்றை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான தின்பண்டங்களில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு சத்துகள் அதிகமாக உள்ளன. அதை சாப்பிடுவதால் நிறைய பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து துரித வகைகளை சாப்பிடும்போது, உடலில் கொழுப்பு சத்து அதிகமாகும், மலச்சிக்கல் ஏற்படும். அதன்மூலம் ரத்த கொதிப்பு, மூளைக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாயில் அடைப்பு, ஹார்மோன் சுரப்பதில் சிரமம், மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், குடல், வயிறு, இரைப்பை புற்று நோய் ஏற்படுவதற்கு துரித உணவு முக்கிய காரணியாக அமைகிறது. எனவே, குழந்தைகள் இதுபோன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு துரித உணவுகளை தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சிறுதானிய உணவு பொருட்களை சாப்பிடும் பழக்கத்தை கற்றுத்தர வேண்டும்.

சேலத்தை சேர்ந்த டாக்டர் ரம்யா செந்தில்குமார்:-

குழந்தைகள் சாப்பிடும் துரித உணவுகளில் அதிக அளவு கெட்ட கொழுப்பு, அதிகளவு சர்க்கரை, உப்பு உள்ளது. சராசரியாக வழக்கத்தை விட துரித உணவுகளில் 300 கலோரி அதிகமாக நமக்கு கிடைக்கும். உடலுக்கு அவசியமான வைட்டமின் பி-12, மெக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு ஊளைசதை அதிகரித்து உடல்பருமன் ஏற்படுகிறது. உப்பு அளவு அதிகரிப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகி குழந்தை பருவத்திலேயே ரத்த ஓட்டம் குறைபாடு ஏற்பட்டு சிறுநீரகம் செயல்திறன் குறைகிறது. உடல்பருமன், செரிமானத்தில் பிரச்சினை ஏற்பட்டு எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்பு வர காரணமாக அமைகிறது. நாட்கள் செல்ல செல்ல இருதய நோய், எலும்பு உறுதி தன்மை குறைபாடு உண்டாகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் நமது பாரம்பரிய உணவு வகைகளை குழந்தைகளுக்கு சாப்பிட சொல்லி கொடுக்க வேண்டும். சிறுதானிய உணவுகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்வியல் உணவு பழக்கமாக மாற்றம் கொண்டுவர வேண்டும்.

விழிப்புணர்வு வரவேண்டும்

சேலம் கலெக்டர் அலுவலக சுகாதார பிரிவு ஊழியர் தமிழரசி:-

இன்றைய அவசர உலகத்தில் பெற்றோர்கள் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக தீங்கு விளைவிக்கிற உணவான துரித உணவுகளையே வாங்கி தருகின்றனர். விளம்பரங்களை பார்த்து கண்ணை கவரும் கலர் உணவு வகைகள், பாட்டிலில் அடைத்துள்ள குளிர்பானங்கள், பாலிதீன் பைகளில் அடைத்துள்ள உணவு பொருட்கள், பரோட்டா, சில்லி சிக்கன், மைதாவில் தயார் செய்து பேக்கரிகளில் விற்கும் உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கி தருவதால் தீராத வயிற்றுவலி, உடல் பருமன், குடல்புண், கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய்கள் வருவதற்கு கூட காரணமாக அமைகின்றது.

இதனை தவிர்க்க பெற்றோர்களிடம் இருந்து விழிப்புணர்வு வரவேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவையே கொடுக்க வேண்டும். பெரும்பாலும் வீட்டில் சமைக்கும் உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நிலக்கடலை, எள், பொட்டுக்கடலை, கொண்டைகடலை, பச்சைப்பயிறு, சிறுதானியங்களை பயன்படுத்தி தயார் செய்த உணவு வகைகள், காய்கள், பழங்கள், மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளை நாம் கொடுக்கவேண்டும். அவ்வாறு கொடுப்பதால் மேற்கண்ட நோய்களில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

சிறுதானியங்கள்

சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஈசன் எழில்விழியன்:-

முன்பெல்லாம் குழந்தைகள் கடலைமிட்டாய், எள்ளுஉருண்டை போன்ற சத்துள்ள உணவுகளை சாப்பிட்டார்கள். இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தது. ஆனால் இன்றைய அவசர உலகில் சிறு குழந்தைகள் இடையே பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தின்பண்டங்கள், நூடுல்ஸ், பிரைடு ரைஸ் போன்ற உணவு வகைகளை உண்ணும் பழக்கம் மிகவும் அதிகமாகி வருவது வேதனை அளிக்கிறது. இந்த வகையான உணவுகளை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே ரத்த அழுத்தம், உடல் பருமன், கற்றலில் குறைபாடு, ஞாபகம் மறதி, மந்தநிலை போன்றவை ஏற்படுகிறது. இதனால் சிறு வயதிலேயே குழந்தைகள் மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. உடலுக்கு தீங்கு இல்லாத நம் முன்னோர்கள் காட்டிய வழியில் பாரம்பரிய தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. வரகு, சாமை, திணை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை வீட்டிலேயே தயாரித்து கொடுக்க வேண்டும். முளைகட்டிய தானிய பயிறு வகைகள், சுண்டல் சாப்பிடுவதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி

சேலத்தை சேர்ந்த இல்லத்தரசி லோகநாயகி:-

இயற்கை உணவுகளான காய்கறிகள், பழங்கள், சிறுதானிய உணவு பொருட்ளை உட்கொண்ட வரையில் குழந்தைகள், சிறுவர்களுக்கு எந்த நோயும் வந்தது இல்லை. இயற்கை சார்ந்த உணவுகளை தவிர்த்த பிறகு துரித உணவுகளை குழந்தைகள் அடிக்கடி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வெளி உணவுகளை வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சுவை பெறுவதற்காக சில பொருட்களை கலந்து செய்யக்கூடிய துரித உணவுகள், சேமியாக்கள் போன்றவை உண்ணும் பொழுது தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படுவதுண்டு. எனவே, உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகளை தவிர்த்து பருப்பு, சோயா பீன்ஸ், கேரட், முருங்கைக்கீரை, வரகு, சாமை, சோளம், கம்பு, ராகி போன்ற சிறுதானிய பொருட்களை பல்வேறு வடிவங்களாக மாற்றி பலகாரங்களாக சமைத்து கொடுக்கும்பொழுது உடல் ஆரோக்கியம் பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story