22 ஆயிரத்து 794 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
22 ஆயிரத்து 794 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
22 ஆயிரத்து 794 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
விலையில்லா சைக்கிள்
மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் 22 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. அதன் தொடக்க விழா, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் உலகனேரி யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் சங்கீதா ஆகியோர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கின்றனர். அவர்களுக்கு தரமான கல்வி அவசியம். கல்வியறிவு பெற்ற மாணவர்கள் எந்த துறையானாலும் வெற்றி பெற்று சாதனையாளர்களாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வி கற்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதும், அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவதும் நமது கடமையாகும். மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை திட்டம், விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம், விலையில்லா சீருடை, பாடப்புத்தகம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கூடுதல் வகுப்பறை
மதுரை மாவட்டத்தில் யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிற அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. இந்த பள்ளியில் மாணவிகளின் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த விழாவில் பள்ளியில் பயிலும் 253 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளியில் ஓரிரு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிட வேண்டும் எனவும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் தேவை எனவும் கோரிக்கை வைத்துள்ளார்கள். இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பேசி நிறைவேற்றி தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கூடுதல் கலெக்டர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், வெங்கடேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் மூர்த்தி, யா.ஒத்தக்கடை, திருமோகூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மகாலில் நடைபெற்ற கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை பார்வையிட்டார். மேலும், முகாமிற்கு வந்திருந்த மகளிருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.