ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்காக பிரபல ரவுடிக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்காக பிரபல ரவுடிக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனை நடந்தது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). பிரபல ரவுடியான இவர் மீது சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் கைதான செந்தில், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவினர் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் செந்தில் உள்ளிட்ட சந்தேகப்படும் நபர்கள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர்.
இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் செந்தில் உள்ளிட்ட 12 பேரும் திருச்சி 6-வது ஜே.எம். கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் முன்னிலையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.
தென்கோவன் என்ற சண்முகம் மட்டும் தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து தென்கோவன் என்ற சண்முகம் தவிர உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான அறிக்கை மற்றும் சான்றிதழை வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) கோர்ட்டில் சமர்ப்பிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதற்கிடையே கடலூர் மத்திய சிறையில் இருந்து செந்தில் நேற்று காலை 11 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள், மருத்துவ பரிசோதனை செய்தனர். சுமார் 1 மணி நேர பரிசோதனைக்கு பிறகு மீண்டும் மதியம் 12 மணியளவில் செந்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.