விவசாய குடும்பத்தினர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கொடுக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை


விவசாய குடும்பத்தினர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கொடுக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை
x

விவசாய குடும்பத்தினர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

விவசாய குடும்பத்தினர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

யூரியா உரம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் தங்களுடைய குறைகளை கலெக்டரிடம் கூறினர். அப்போது அவர்கள் கூறும்போது:-

கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு அதில் பனை மர விதைகளை நட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாய பணிக்கு தேவைப்படும் யூரியா உரத்தில் கலப்படம் கலக்கப்படுகிறது. வயல்வெளிகளிலும், பொதுஇடங்களிலும் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.

மகளிர் உரிமைத்தொகை

மகளிர் உதவி திட்டத்தில் உள்ள சில நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். 4 சக்கர வாகனம் மற்றும் வருமான வரி கணக்கு போன்றவற்றை நீக்கி அனைத்து விவசாய குடும்பத்தினருக்கும் மகளிர் உரிமைத்தொகை கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

கீழ்பவானி வாய்க்காலின் கிளை வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். பண்ணாரி, சத்தியமங்கலம் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையினை கொடுக்கவேண்டும். வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி கிராமத்துக்குள் புகுந்துவிடுகின்றன. வனத்துறையினர் சார்பில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்த வேண்டும்.

கரும்பு-தேங்காய்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக அரசு வழங்க வேண்டும், தமிழக அரசு பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி வழங்கி உள்ளது. ஆனால் தனியார் நிறுவனத்தினர் லிட்டருக்கு ரூ.10 வழங்குகின்றனர். எனவே பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கவேண்டும். தேங்காய், கொப்பரை தேங்காய்களுக்கு உரிய விலை விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை.

அதனைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறுகையில், 'கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் மற்றும் வயல்வெளிகளில் மதுபாட்டில்களை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். மேலும் கீழ்பவானி வாய்க்காலின் கிளை வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை உடனடியாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மொத்தம் 77 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story