நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்குகூடுதல் போனஸ்- கலெக்டரிடம் கோரிக்கை
நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி, போனஸ் கூடுதலாக வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி, போனஸ் கூடுதலாக வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
மனு
மதுரை அனைத்து தொழிற்சங்க ஐக்கிய குழு நிர்வாகிகள், தலைவர் கோபிநாத் (ஐ.என்.டி.யூ.சி.), செயலாளர் ரவீந்திரன் (ஜனதாதளம்), பொருளாளர் பத்மநாபன் (ஏ.டி.பி.), இணைச்செயலாளர் சுதர்சன் (பி.எம்.எஸ்.), துணைத்தலைவர் ஈஸ்வரன் (சி.ஐ.டி.யூ.), துணைத்தலைவர் தாமோதரன் (ஏ.ஐ.டி.யூ.சி.), துணைச்செயலாளர் லெட்சுமணன் (எல்.பி.எப்.) ஆகியோர் மாவட்ட கலெக்டரிடமும் நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை டவுன், புறநகர், கைத்தறிநகர், சக்கிமங்கலம், வண்டியூர், பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன்நகர், கடச்சனேந்தல், ஸ்ரீனிவாசா காலனி, எல்.கே.டி. நகர் மற்றும் பல பகுதிகளில் நைஸ்ரக கைத்தறி ஜவுளி ரகமான வேட்டி, கோடம்பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யும் நைஸ்ரக நெசவுத் தொழிலாளர்கள் அவரவர் வீடுகளில் ஒரு தறி, இரு தறி அமைத்து நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு-நூல் மற்றும் கூலி பெற்று தொழில் செய்து வருகின்றனர்.
கூலி, போனஸ் கூடுதலாக வழங்க வேண்டும்
தற்போதைய கடுமையான விலை உயர்வு, வாடகை உயர்வு காரணமாக மிக சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மாற்று வேலைவாய்ப்பு இன்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்வு, போனஸ் உயர்வு சம்பந்தமான ஒப்பந்தம் வருகின்ற 11.11.2023 அன்றுடன் காலாவதி ஆகிறது. எனவே வருகின்ற 12.11.2023 (தீபாவளி) முதல் நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 40 சதவீதம் கூலி உயர்வும், இந்த ஆண்டு தீபாவளிக்கான போனஸ் 20 சதவீதமும் வழங்கி கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.