வீட்டுமனை பட்டா வழங்கக்கோரிகலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


வீட்டுமனை பட்டா வழங்கக்கோரிகலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x

விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.

ஈரோடு

விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.

காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 7 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்ேகாரி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.துரைராஜ் தலைமை தாங்கினார். ஈரோடு பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு, அலுவலகத்துக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

67 பேருக்கு பட்டா

இதுகுறித்து சங்க தலைவர் துரைராஜ் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி முதல்-அமைச்சர் மூலமாக 33 பேருக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 67 பேருக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. அப்போதெல்லாம் ஏதாவது காரணத்தை கூறி காலஅவகாசம் கேட்கப்பட்டதால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். பட்டா பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இதேபோல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நரம்பு, பக்கவாத பாதிப்பு பிரச்சினைகளுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை மற்றும் சான்றிதழ் பெறுவதற்கு டாக்டரை நியமிக்கக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் டாக்டர் காஞ்சனா வாரந்தோறும் ஈரோட்டுக்கு வந்து சிகிச்சை அளித்தார். அவர் நீண்ட நாட்கள் விடுப்பில் இருப்பதால் நாங்கள் நரம்பியல், எலும்பு முறிவு சிகிச்சை பெறுவதற்கும், சான்றிதழ் பெறுவதற்கும் கோவை அல்லது சேலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை

ஈரோடு ரெயில் நிலையத்தில் இயக்கப்பட்டு வந்த மின்சார வாகன சேவை நிறுத்தப்பட்டதால் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் நடைமேடைக்கு செல்ல அவதிப்படுகிறார்கள். மின்சார வாகன சேவையை தொடங்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களது வாகனத்திலேயே நடைமேடை வரை செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

ஈரோடு பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் 2 இடங்களில் அமைக்க வேண்டும். மேலும், பஸ் நிலையம், ரெயில் நிலையம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறையை அமைக்க வேண்டும். ஏற்கனவே கழிப்பறை உள்ள இடங்களில் முறையாக சுத்தம் செய்து, பழுது நீக்க மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இந்த கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story