நாகைக்கு, விற்பனைக்கு வந்த நாவல் பழங்கள்


நாகைக்கு, விற்பனைக்கு வந்த நாவல் பழங்கள்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், பெங்களூரு நாவல் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது பழங்கள் கிலோ ரூ.400-க்கு விற்பனையாகிறது.

நாகப்பட்டினம்


நாகையில், பெங்களூரு நாவல் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது பழங்கள் கிலோ ரூ.400-க்கு விற்பனையாகிறது.

மருத்துவ குணம்

பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த மரங்களில் ஒன்றாக நாவல் மரம் விளங்கி வருகிறது. அதில் இருந்து கிடைக்கக்கூடிய நாவல்பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவையாகவே உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய்க்கு நாவல் பழம் அருமருந்தாக விளங்குகிறது.

கிராமப்புறங்களில் ஆறு, குளம் மற்றும் சாலையோரங்களில் அதிகளவில் நாவல் மரங்கள் காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் கடைசி வரை நாவல்பழ சீசன் காலமாகும். தற்போது நாகையில் நாவல் மரத்தில் காய்கள் தென்பட தொடங்கியுள்ளது. மேலும் பெங்களூருவில் இருந்து விற்பனைக்காக நாவல் பழங்கள் நாகைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளது.

கருநீல நிறம்

நாகை பப்ளிக் ஆபிஸ் ரோடு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், நாகூர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் வியாபாரிகள் நாவல் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் கருநீல நிறத்தில் ஜொலிக்கும் நாவல்பழங்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளது. உள்ளூர் பழங்களை விட பெங்களூருவில் இருந்து விற்பனைக்கு வரும் பழங்கள், அளவில் பெரியதாக உள்ளதால் பொதுமக்கள் அதனை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

1 கிலோ ரூ.400-க்கு விற்பனை

இதனால் பல கடைகளிலும், தள்ளுவண்டி மூலமாகவும் வியாபாரிகள் நாவல் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளதாலும், சுவைத்து பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்திலும் விலையை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் மக்கள் அதிக அளவில் நாவல் பழங்களை வாங்கி செல்கின்றனர். அதே போல விலை அதிகமாக உள்ளதால் பாமர மக்களுக்கு நாவல் பழம் எட்டா கனியாக உள்ளது.


Next Story