சாப்பாட்டுக்கு பணம் கொடுக்காததால் ஒருவர் அடித்துக்கொலை; ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
ஆத்தூரில் சாப்பாட்டுக்கு பணம் கொடுக்காத தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூரில் சாப்பாட்டுக்கு பணம் கொடுக்காத தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிணமாக கிடந்தார்
ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தென்புறம் தெற்கு ஆத்தூர் முடிவில் ரோட்டிற்கு மேல்புறம் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் அருகே கடந்த 24-ந் தேதி 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக ஆத்தூர் போலீசில் மேல ஆத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ஜெய்லானி பீவி புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு வசந்த ராஜ் தலைமையில் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
அடித்துக் கொலை
இதற்கிடையே அந்த இடத்தின் அருகே ஓட்டல் நடத்தி வரும் வடக்கு ஆத்தூரை சேர்ந்த முத்தையா மகன் மோசஸ் அமல்ராஜ் (வயது 46) என்பவரையும், அவரது ஓட்டலில் வேலை பார்க்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது தாஹா என்பவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த நபரை அடித்துக் கொன்றது தெரியவந்தது.
2 பேர் கைது
அடையாளம் தெரியாமல் இறந்த கிடந்த அந்த நபர் அவர்களது ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் வெளியே சென்றதாகவும், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஓட்டலில் கிடந்த விறகு கட்டையால் இருவரும் சேர்ந்து அந்த நபரை தலையில் தாக்கியதில், அதில் எதிர்பாராதவிதமாக அந்த நபர் இறந்து போனதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி அமல்ராஜ், முகமது தாஹா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.