போலீஸ் பணிக்கான தேர்வுக்குமுன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்
போலீஸ் பணிக்கான தேர்வுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்தேர்வு நடக்க உள்ளது. மொத்தம் 3,359 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடக்கிறது. ஆண்கள் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,576 பணியிடங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீட்டின்படி 129 பணியிடங்கள் உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந்தேதி கடைசி நாள். மேலும், முன்னாள் படைவீரர்களுக்கான வயது வரம்பு உள்ளிட்ட ஏனைய விவரங்களையும் அந்த இணையதள முகவரியில் அறிந்துகொண்டு, விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவல் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.